
மத்தியில் ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். எனவே, தேர்தலுக்கு பின் பாஜக அல்லாத அணியுடன் கைகோக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது என்று தில்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
சண்டீகரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் இந்த நாட்டுக்கு பெரும் ஆபத்தானவர்கள். சமூகத்தில் பிளவைத் தூண்டிவிட்டு, மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வருவதே அவர்களது விருப்பம். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் கலவரங்கள் அதிகரித்துவிடும். அவர்கள் இருவரும் சேர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் போல இந்தியாவை மாற்றிவிடுவர். எனவே, அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்.
மத்தியில் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும். இதற்காக பாஜக அல்லாத அணியுடன் கைகோக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். உண்மையான பிரச்னைகளின் அடிப்படையில் அல்லாமல், மோடியை மட்டுமே நம்பி, பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டது. இத்தேர்தலில் அவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கப்போகின்றன என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், சிபிஐ, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் சீரழிக்கப்பட்டன என்றார்
சிசோடியா.
பஞ்சாபில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு சிலர் கருப்புக் கொடி காட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்கள் யாரும் கேஜரிவாலுக்கு கருப்புக் கொடி காட்டவில்லை. அரசியல் எதிரிகள்தான் அந்த செயலில் ஈடுபட்டனர் என்றார் சிசோடியா.
சண்டீகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்மோகன் தவான் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜக சார்பில் கிரண் கெர் மீண்டும் களத்தில் உள்ளார். கிரண் கெர் தொடர்பாக கருத்து தெரிவித்த சிசோடியா, கடந்த தேர்தலில் கிரண் கெர் மீது நம்பிக்கை வைத்து அவரை சண்டீகர் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், திரைப்பட படப்பிடிப்புகளிலும், விளம்பரங்களிலும் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். தொகுதி மக்களின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை என்றார்.