Enable Javscript for better performance
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார் மோடி: ராகுல் மீண்டும் தாக்க- Dinamani

சுடச்சுட

  

  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார் மோடி: ராகுல் மீண்டும் தாக்கு

  By DIN  |   Published on : 15th May 2019 01:16 AM  |   அ+அ அ-   |    |  

  ragul

  மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகளால், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச்சில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
  நடிகர் அக்ஷய்குமாருக்கு அளித்த பேட்டியின்போது, தாம் சிறு பிள்ளையாக இருக்கையில் மாம்பழங்கள் விரும்பி சாப்பிட்டதாகவும், தற்போதும் மாம்பழங்கள் என்றால் தமக்கு மிகவும் விருப்பம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். 
  மாம்பழங்கள் எப்படி சாப்பிடுவது என்பது குறித்து மோடி நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவரிடம் ஒன்று கேட்கிறேன். நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் நலனுக்காக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்த கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
  சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன: குறைபாடுடைய ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகளால்  நாட்டின் பொருளாதாரத்தில் பிரச்னைகள்தான் ஏற்பட்டன. நாடு முழுவதும் இந்த நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழந்து விட்டனர். சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன. நாட்டின் பொருளாதாரத்தையே இந்த நடவடிக்கைகள் சீர்குலைத்து விட்டன. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைகள்தான் காரணம். 
  காங்கிரஸின் நியாய் திட்டம் அமலாகும்போது, 5 கோடி குடும்பங்கள் பெரிதும் பயனடையும். அக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6,000 கிடைக்கும். அதாவது 5 கோடி குடும்பங்களுக்கு 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வீதம், ரூ.3.6 லட்சம் நிதியுதவி நியாய் திட்டம் மூலம் அளிக்கப்படும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதும், சிறு குறு தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதும் நியாய் திட்டம் மூலம் உறுதிப்படுத்தப்படும். நியாய் திட்டத்துக்கு தேவைப்படும் நிதி, தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோரிடம் இருந்து பெறப்படும். மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத காரணத்துக்காக விவசாயிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றார் ராகுல் காந்தி.
  மழை பெய்கையில் விமானங்கள் மறையக்கூடும்: பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய குண்டுவீச்சு குறித்து பிரதமர் மோடி அண்மையில் பேசியபோது, இத்தாக்குதலின்போது விமானப்படைக்கு மேகங்கள் உதவி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இதை ராகுல் காந்தி கிண்டல் செய்தார். இதுகுறித்து ராகுல் கூறுகையில், எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் இந்திய விமானங்கள் அனைத்தும் ரேடார் சாதனங்களில் இருந்து மறைந்துவிடும் என்றார்.
  அன்பால் மோடியை தோற்கடிப்பேன்: உஜ்ஜைனில் நடைபெற்ற இன்னொரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் எனது தந்தை, பாட்டி ஆகியோரை பிரதமர் மோடி அவமதிக்கிறார். ஆனால் நான் அதுபோல், அவருடைய தாய், தந்தை, குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். 
  நான் உயிரிழந்தாலும் இழப்பேனே தவிர, அவருடைய தாய், தந்தையை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். ஏனெனில், நான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. காங்கிரஸை சேர்ந்தவர். என் மீது வெறுப்பு காட்டினால், அதற்கு பதிலாக அன்பையே செலுத்துவேன். தேர்தல் பிரசாரத்தில் மேகங்கள், மாம்பழங்கள் குறித்து பேசுவதை விடுத்து, உண்மையான மக்களின் பிரச்னைகள் குறித்து மோடி பேச வேண்டும். பிரதமர் மோடியை அன்பால் காங்கிரஸ் தோற்கடிக்கும் என்றார் ராகுல்.


   

  kattana sevai