சுடச்சுட

  

  பாலியல் வன்கொடுமை சம்பவம்: ராஜஸ்தான் முதல்வர் பதவி விலக ஜாவடேகர் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 15th May 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prakas-jawadekar


  ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்த முதல்வர் அசோக் கெலாட் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வலியுறுத்தியுள்ளார். 
  கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில், தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலித் பெண்ணை வழிமறித்த ஒரு கும்பல், கணவரை தாக்கியதுடன்அவரது கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து, அந்தப் பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் கடந்த 30ஆம் தேதியன்று, புகார் கொடுக்க முயன்றபோது, மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி வழக்கை ஏற்க மறுத்து போலீஸார் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மே 7ஆம் தேதி மிகத்தாமதமாகவே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
  இச்சம்பவம் தொடர்பாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: இன்னும் சில தினங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
  அவ்வாறு, ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வரும்போது, தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் அசோக் கெலாட்டை ராஜிநாமா செய்யுமாறு ராகுல்காந்தி வலியுறுத்த வேண்டும். மாநில உள்துறை அமைச்சராகவும், முதல்வர் கெலாட்தான் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கொடூரமான குற்றம் குறித்து அவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. 
  அரசியல் காரணங்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் 6 நாள்கள் வரை அவர்களை அலைக்கழித்துள்ளனர். 
  தற்போது, ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வரும் பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், இச்சம்பவம் தொடர்பாக அமைதிகாத்து வருவதுடன், தலித் மக்களுக்கு எதிரான இந்த குற்றச்செயலை கண்டிக்கவும் இல்லை. 
  எனவே, இந்தச் சம்பவத்தை கண்டித்து, மாயாவதி காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் மாயாவதிக்கு எதிராக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai