காங்கிரஸ் போதுமே போதும்: மக்கள் முடிவு என்று மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி நாட்டை இதுவரை ஆண்டது போதும்; இனி அந்தக் கட்சியின் ஆட்சி வேண்டவே, வேண்டாமென மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று
பிகார் மாநிலம் பக்ஸரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார்.
பிகார் மாநிலம் பக்ஸரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார்.

காங்கிரஸ் கட்சி நாட்டை இதுவரை ஆண்டது போதும்; இனி அந்தக் கட்சியின் ஆட்சி வேண்டவே, வேண்டாமென மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, நடந்தது நடந்துவிட்டது, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று பதிலளித்தது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் நாட்டுக்கு செய்ததெல்லாம் போதும் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்பு:
பிகார் மாநிலம் பக்ஸர், சசாரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:
நாட்டில் பல ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல், ஊழல், ஆணவப் போக்கு உள்ளிட்டவற்றால் மக்கள் முழுவதும் வெறுப்படைந்துவிட்டனர். உங்கள் கட்சியும், ஆட்சியும் நாட்டுக்கு இதுவரை செய்ததெல்லாம் போதும்; இனி காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் நாட்டுக்கு வேண்டாமென்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதி மக்களின் இந்த முடிவு வெளிப்படும்.
வரலாற்றை மாற்றினர்: காங்கிரஸ் கட்சி எத்தகைய ஆணவப் போக்கு உடையது என்பது அவசரநிலையை பிரகடனப்படுத்தியபோதே பகிரங்கமாக வெளிப்பட்டது. நாட்டுக்கும், மக்களுக்கும் அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) போன்ற தலைவர்கள் ஆற்றிய தொண்டுகளை காங்கிரஸ் கட்சி மூடி மறைத்து, வரலாற்றை மாற்றியது.
ஜெயப்பிரகாஷ் நாராயண், அம்பேத்கர் ஆகியோரை பின்பற்றுவதாகக்கூறி பிகாரில் அரசியல் நடத்தும் ஒருவர் (லாலு) இப்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு வாக்கு கேட்கிறார். சசாரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் (மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார்) தந்தையான பாபு ஜெகஜீவன் ராமை காங்கிரஸ் கட்சி மோசமாக அவமானப்படுத்தி கட்சியில் இருந்து வெளியேற்றியதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: முந்தைய காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் அடிபணிந்து செல்லும் நிலையில் இருந்தது. காஷ்மீர் உள்பட நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால், இப்போது பாலாகோட்டில் நமது விமானப்படை, பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தபோது,  எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களது உடல்களைக் காட்ட முடியுமா என்று அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள்.
சிந்தித்து வாக்களியுங்கள்: வாக்களிக்கும்போது நான் கூறும் ஒரு விஷயத்தை மட்டும் நன்கு சிந்தியுங்கள். நமது நாட்டில் பல ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டது, மக்கள் நலனை எந்த அளவுக்குப் புறக்கணித்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு, மக்களின் முதன்மை காவலனாக இருந்து பணியாற்றியதையும் யோசியுங்கள்.
பிரதமராக இருக்கும் இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் இருந்தே எனது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com