மக்களால் கண்காணிக்கப்படுகிறார் மோடி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா

பிரதமர் நரேந்திர மோடி மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அமரீந்தர் சிங் ராஜா மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா.
காங்கிரஸ் வேட்பாளர் அமரீந்தர் சிங் ராஜா மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா.


பிரதமர் நரேந்திர மோடி மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அண்மையில் பேசுகையில், தாக்குதல் நடத்திய நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது. அதனால் நமது விமானங்களை பாகிஸ்தானின் ரேடாரால் கண்டறிய முடியவில்லை. நாம் தாக்குதல் நடத்த மேகங்கள் கூட உதவியாக இருந்தது என்று கூறியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பிரியங்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அமரீந்தர் சிங் ராஜாவை ஆதரித்து பிரியங்கா பேசியதாவது:
பாலாகோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது, நமது விமானங்கள் பாகிஸ்தான் ரேடாரில் தெரியாதவாறு மேகங்கள் மறைத்து உதவியதாக மோடி கூறுகிறார். அவரையும் மக்கள் என்கிற ரேடார் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. வெறும் வாக்குறுதிகளை மட்டுமே மோடி அளித்து வருகிறார். நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. 
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 12, 000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து மோடி கவலை கொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்னைகளை அவர் புறக்கணித்து விட்டார். மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே இந்த தேர்தல் நடைபெறுகிறது. மோடியின் உண்மையான முகத்தை மக்கள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்றார் பிரியங்கா.
இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்து கொண்டார்.
பிரியங்காவின் ஹிமாசல் பயணம் ரத்து: ஹிமாசலப் பிரதேசத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய பிரியங்கா மேற்கொள்ளவிருந்த பயணம், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
4 மக்களவைத் தொகுதிகள் உள்ள ஹிமாசலப் பிரதேசத்துக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷ்ராய் சர்மாவை ஆதரித்து பிரியங்கா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக பிரியங்காவின் பயணம் ரத்து செய்யப்பட்டது. 
மாண்டி தொகுதியில் பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மாவுக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் ஆஷ்ராய் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com