மே 23 முதல் பாஜகவுக்கு கெட்ட காலம்

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதி பாஜகவுக்கு கெட்ட காலம் தொடங்கும் என்று உத்தரப் பிரதேச மாநில மகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய


தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதி பாஜகவுக்கு கெட்ட காலம் தொடங்கும் என்று உத்தரப் பிரதேச மாநில மகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பலியாவில் செவ்வாய்க்கிழமை மகா கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில் மாயாவதி பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக, மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்துவிடவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதி பாஜகவுக்கு கெட்ட காலம் தொடங்கும். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும் அப்போது மோசமான காலகட்டம் தொடங்கிவிடும்.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மீண்டும் தனது கோரக்பூர் மடத்துக்குத் திரும்புவதற்கு தயாராக வேண்டியதுதான் என்றார். 
பிரசாரக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
தேர்தல் முடிவு என்ன ஆகப்போகிறது என்பது பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். அக்கட்சித் தலைவர்கள் பலர் தூக்கம் தொலைத்துவிட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதுமே மகா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. இதில் பாஜக வேருடன் வீழ்த்தப்படும். இதன் மூலம் மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். பாஜக நடத்தும் பிரசாரக் கூட்டங்களில் உற்சாகம் குன்றிவிட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டைத் தூய்மையாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இதனால், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, அக்கட்சியைத் துடைத்தெறிந்து நாட்டைத் தூய்மையாக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com