
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், கொல்கத்தாவைச் சேர்ந்த தயாள் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.483 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கொல்கத்தாவைச் சேர்ந்த தயால் குழும நிறுவனங்கள், போலியான நிறுவனங்களின் பேரில் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் இருந்து கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.524 கோடி கடன் பெற்றது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. தற்போது அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.483 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யூகோ வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, தயாள் நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.234 கோடியை கடந்த 2016-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.