சுடச்சுட

  

  கொல்கத்தா வன்முறையின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 16th May 2019 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha

  தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர்அமித் ஷா.


  கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் மூண்ட வன்முறையின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
  மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் அமித் ஷாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போது அமித் ஷாவை குறிவைத்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும், கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் அமித் ஷாவின் பேரணி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
  இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அமித் ஷா, கொல்கத்தா வன்முறை சம்பவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
  பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால் எந்த மாநிலத்திலும் வன்முறைகள் நிகழவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு திரிணமூல் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் போட்டியிடுவதுதான் காரணம்.
  கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎஃப் வீரர்கள் அளித்த பாதுகாப்பின் காரணமாகத்தான், எந்தவித காயமும் இன்றி என்னால் தப்ப முடிந்தது.
  திரிணமூலுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மக்களவைக்கு நடைபெற்ற கடந்த 6 கட்டத் தேர்தல்களிலும், மேற்கு வங்கத்தில் பரவலாக வன்முறைகள் நடைபெற்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் ரௌடிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
  தேர்தல் ஆணையம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
  பாஜக பெரும்பான்மையை தாண்டிவிட்டது: கடந்த 6 கட்டத் தேர்தல்களிலேயே பாஜக தனிப் பெரும்பான்மையை தாண்டிவிட்டது. பல்வேறு மாநிலங்களிலும் நான் சுற்றுப்பயணம் செய்துவிட்டேன். அங்கு காணப்படும் பாஜக ஆதரவை வைத்து இதை உறுதியாக தெரிவிக்கிறேன். 7ஆவது கட்டத் தேர்தலின்போது பாஜக 300 தொகுதிகளை தாண்டிவிடும். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசமைக்கும்.
  கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க டிஆர்எஸ் போன்ற பிராந்திய கட்சிகள் ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிராந்திய கட்சிகளின் கூட்டங்களால், பாஜகவின் வெற்றி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 
  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய கூட போதிய பலம் கிடைக்காது என்றார் அமித் ஷா.

  நான் அந்நியன் இல்லை: மம்தா குற்றச்சாட்டுக்கு பதிலடி

  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு வந்த அந்நியர் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ள நிலையில், நான் அந்நியன் இல்லை; தேர்தல் பிரசாரத்துக்காகவே வந்தேன் என்று அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.
  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக அமித் ஷா என்ற அந்நியர் மேற்குவங்கத்துக்கு வருகிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா கூறியதாவது:
  பாஜக ஒரு தேசிய கட்சி. அக்கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் எனது கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இங்கு வருகிறேன். ஆனால் என்னை அந்நியர் என்று கூறுவது எந்த விதத்தில் சரி? இந்தியாவின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றான மேற்குவங்கத்துக்கு நான் வருவதை அந்நியம் என்று மம்தா கூறுவது ஆச்சரியமாக உள்ளது. 
  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், தில்லி அல்லது மும்பைக்கு சென்றால், அவர் அந்நியர் ஆகிவிடுவாரா? மம்தா தில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் அந்நியரா? என்று கேள்வி எழுப்பினார்.
  மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் ஆவாரே தவிர,  நானோ, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், பாஜக தேசிய பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்வராக முடியாது.
  பாஜக பேரணியின்போது நடைபெற்ற வன்முறைக்கு பாஜகவினர்தான் காரணம் என்று ஊடகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
  ஆனால், உண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ரெளடிகளே எனது வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். ஊடகங்கள் இதை மறைத்து, மம்தாவுக்கு ஆதரவாக செய்தி வெளிவிடுகின்றன என்று கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai