சுடச்சுட

  

  கொல்கத்தா வன்முறையைக் கண்டித்து தில்லியில் பாஜக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 16th May 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nirmala

  கொல்கத்தா சம்பவத்தைக் கண்டித்து, தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன், ஜிதேந்திர சிங்


  கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து தில்லியில் அக்கட்சியின் தலைவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அப்போது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கற்கள் வீசியதாகவும், இதில் அமித் ஷா காயமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது. வன்முறையாளர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் பதற்றமான சூழல் நிலவியது. 
  இந்நிலையில், இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தரில் பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். 
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 
  கொல்கத்தாவில் அமித் ஷா பங்கேற்ற பேரணி, வன்முறையால் பாதிக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் காவல் படையினர் இல்லாமல் போயிருந்தால், அவர் உயிருடன் திரும்பியிருக்க மாட்டார். மக்களவைத் தேர்தலில் தான் சந்திக்க இருக்கும் தோல்வியை நினைத்து மேங்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முற்றிலும் அச்சம் கொண்டிருக்கிறார். 
  அவர் தனது கட்சித் தொண்டர்களை வன்முறையில் ஈடுபட  தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். கல்லூரி வளாகத்தில் பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டிருந்த பிரபல சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை எப்படி உடைக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் திரிணமூல் கட்சித் தொண்டர்கள் இருந்ததால் இந்தத் தாக்குதலுக்கு அவர்கள்தான் காரணம். 
  இந்த விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் மீது குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, முழு பொய்யை பரப்ப முயற்சிக்கிறார். மேங்கு வங்கத்தில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. சமூக வலைதளத்தில் மீம் பகிர்வு செய்ததற்காக பாஜக இளைஞர் பிரிவு ஆர்வலர் பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார் என்றார் அவர். 
  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், மேற்கு வங்கத்தில் பாஜக பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறை ஒரு சதியாகும். நம் நாட்டில் எத்தகைய ஜனநாயக முறையை நாம் வளர்க்க அனுமதிக்கிறோம்?  வன்முறை இல்லாத நிலையை ஏற்படுத்தாவிட்டால், ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய  முடியாது. மாநிலத்தில்  அமைதியான முறையில் ஜனநாயகம் தழைத்தோங்குவதை  உறுதிப்படுத்தவே மக்களை அமித் ஷா சந்தித்தார் என்றார். 
  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், வன்முறைச் சம்பவத்திற்குக் காரணமான மம்தா பானர்ஜியின் அரசைக் கலைக்க உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்களை குண்டர்களாக திரிணமூல் காங்கிரஸ் அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக தலைவர்கள் வரும் ஹெலிகாப்டரை தரையிறக்க மம்தா அனுமதிப்பதில்லை. எங்கள் கட்சி சார்ந்த சுவரொட்டிகளையும் அகற்றுகின்றனர். பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை. உலகில் விஞ்ஞானிகள், மாமேதைகளின் மாநிலமாக அறியப்பட்ட மேற்கு வங்கத்தின் பெயர் தற்போது களங்கத்துக்குள்ளாகிறது என்றார். 
  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த மத்திய இணையமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கைக் கண்டு அவர் பயந்துள்ளார். இதுபோன்ற வன்முறைக்கு எதிராக பாஜக போராடும். மம்தா பானர்ஜியை ஆதரிக்கும் சக்திகள், முன்பு கம்யூனிஸ்டுகளை ஆதரித்தவர்கள். 
  இதுபோன்ற செயல்களில் மம்தா பானர்ஜி ஈடுபட்டால் மக்களிடமிருந்து பாஜகவுக்கு அதிகம் ஆதரவு கிடைக்கும். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai