
போபால்: நாதுராம் கோட்ஸே அன்றும் இன்றும் என்றும் தேச பக்தர்தான் என்று பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர், ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார்.
அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் பிரசாரம் செய்யத் தடைகோரியும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள. முன்ஜாமீன் கேட்டு கமல் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கானது வியாழன் மதியம் விசாரணைக்கு வருகிறது.
பிரதமர் மோடியும் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 'ஒரு ஹிந்து எப்போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது' என்றுகரு த் து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாதுராம் கோட்ஸே அன்றும் இன்றும் என்றும் தேச பக்தர்தான் என்று பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தான் போட்டியிடும் போபால் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அவரிடம், வியாழனன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாதுராமன் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH BJP Bhopal Lok Sabha Candidate Pragya Singh Thakur says 'Nathuram Godse was a 'deshbhakt', is a 'deshbhakt' and will remain a 'deshbhakt'. People calling him a terrorist should instead look within, such people will be given a befitting reply in these elections pic.twitter.com/4swldCCaHK
— ANI (@ANI) May 16, 2019