அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்: யோகி ஆதித்யநாத்

அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் இருப்பார் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்: யோகி ஆதித்யநாத்


அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் இருப்பார் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோரக்பூரில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 74இல் வெற்றி பெறும். இது கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் 3 தொகுதிகள் அதிகம் ஆகும்.
சோஷலிஸ தலைவர் ராம் மனோகர் லோகியாவின் கனவை பிரதமர் நரேந்திர மோடி பூர்த்தி செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்.
முன்பு நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது, அவரிடம் நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கிராமங்களில்தான் வசிக்கின்றனர், நாட்டில் உள்ள ஏழைகள் வீட்டில் எப்போது கழிப்பறை என்று கட்டப்படுகிறதோ, அவர்களின் எரிவாயு தேவை பூர்த்தி செய்யப்படுகிறதோ, அப்போது பிரதமராக இருப்பவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே பதவியை வகிப்பார் என்று லோகியா தெரிவித்தார்.
1966 அல்லது 1967ஆம் ஆண்டில் இந்த கருத்தை லோகியா முன்வைத்தார். ஆனால் அவரது கனவு, தற்போதுதான் உண்மையாகியுள்ளது. லோகியாவின் பெயரை முன்வைத்து ஏராளமானோர் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அவரது கனவை பூர்த்தி செய்தது பிரதமர் மோடிதான். சாதி, மதம், பிராந்தியம், வாக்கு வங்கி அரசியல் ஆகிய அனைத்தும் இந்த மக்களவைத் தேர்தலில் முடிவு கட்டப்பட்டு விடும்.
மத்தியில் பாஜகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதிதாக 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 12.5 கோடி விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 15 கோடி இளைய தலைமுறையினர் பயனடைந்துள்ளனர். 37 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தலுக்கும், பொதுத் தேர்தலுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பொதுத் தேர்தலில்தான் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் முன்பு சமாஜவாதி அரசு ஆட்சியிலிருந்தபோது செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. மாநிலத்தை சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கொள்ளையடித்து விட்டார் என்றார் யோகி ஆதித்யநாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com