தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க மணிசங்கர் அய்யர், பிட்ரோடாவை களமிறக்கியுள்ளது காங்கிரஸ்: மோடி விமர்சனம்

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க மணிசங்கர் அய்யர், சாம் பிட்ரோடா ஆகியோரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட மாலை அணிவித்து கௌரவிக்கும் பாஜக நிர்வாகிகள்.
ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட மாலை அணிவித்து கௌரவிக்கும் பாஜக நிர்வாகிகள்.


மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க மணிசங்கர் அய்யர், சாம் பிட்ரோடா ஆகியோரை காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்த கேள்விக்கு, நடந்தது நடந்துவிட்டது, அதனால் என்ன? என்று சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்தும், பிரதமர் மோடியை கீழ்த்தரமானவர் என்று மணிசங்கர் அய்யர்  தெரிவித்த கருத்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி மேற்கண்ட விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலம், தியோகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்த கேள்விக்கு ஒருவர், நடந்தது நடந்து விட்டது, அதனால் என்ன? என்று கேள்வி கேட்டார். இன்னொருவரோ, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது என்னை விமர்சித்ததற்காக கண்டிக்கப்பட்டவர். அவர் மீண்டும் எனக்கு எதிராக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் பின்னடைவுக்கு பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பு அந்த 2 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்த 55 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை, பாஜக அரசு கடந்த 55 மாதங்களில் செய்துள்ளது. நாடு வளர்ச்சியை நேரில் கண்டு வருகிறது. மத்திய பாஜக அரசு மீது எந்த கறையும் இல்லை. கோயில் நகரமான தியோகரில் இருந்து இதை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நேர்மையான அரசுக்கு தலைமை வகிப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன் என்றார் மோடி.
பிகாரில் பிரசாரம்: இதேபோல், பிகார் மாநிலம், பலிகஞ்சில் நடைபெற்ற பாஜக கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேச பாதுகாப்பை விவகாரமாக்க கூடாது என்று கலப்பட கூட்டணியினர் தெரிவிக்கின்றனர். பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழக்கும்போது, அதை ஏன் விவகாரமாக்க கூடாது?
தேர்தலில் நான் பிகாரில் பிரசாரம் செய்வது இதுதான் கடைசி முறையாகும். ஆனால் மீண்டும் பிரதமராக பதவியேற்றவுடன், புதிய வளர்ச்சித் திட்டங்களுடன் பிகாருக்கு திரும்பி வருவேன். பிகார் மக்கள் காட்டும் அன்பு, தேர்தலில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
தேர்தலில் ஜாதி அடையாளங்களை பயன்படுத்தும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸும், பின்னர் பதவிக்கு வந்ததும் குடும்பத்தினரை ஊக்குவிக்கும் செயலிலேயே ஈடுபடும். வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்காது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com