தொங்கு மக்களவை அமைந்தால் கூட்டாட்சி முன்னணியில் பிராந்திய கட்சிகள் சேரும்: டிஆர்எஸ் கட்சி

தொங்கு மக்களவை அமையும்பட்சத்தில், சந்திரசேகர் ராவ் முன்வைக்கும் கூட்டாட்சி முன்னணியில் பிராந்திய கட்சிகள் இணையும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.


தொங்கு மக்களவை அமையும்பட்சத்தில், சந்திரசேகர் ராவ் முன்வைக்கும் கூட்டாட்சி முன்னணியில் பிராந்திய கட்சிகள் இணையும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டணிக்கு கூட்டாட்சி முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இக்கூட்டணி தொடர்பாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்திரசேகர் ராவ் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ஹைதராபாதில் டிஆர்எஸ் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும், மூத்த நிர்வாகியுமான ராஜேஷ்வர ரெட்டி, பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸுடன் கூட்டணி என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிலைப்பாட்டால், எங்களது கட்சியின் முயற்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக ஏற்கெனவே அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், பிராந்திய கட்சிகளை கொண்ட கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் டிஆர்எஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. பிராந்திய கட்சிகளுடன் ஏற்கெனவே டிஆர்எஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காமல் போகும்பட்சத்தில், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் ஆட்சியமைக்க பிராந்திய கட்சிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு தரும். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவு தருமாறு அக்கட்சியை வலியுறுத்தும்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், தொங்கு மக்களவை அமையும்பட்சத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் கூட்டாட்சி முன்னணிக்கு ஆதரவு தர வாய்ப்புள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com