மேற்கு வங்கத்தில் பாஜக அலை: தேர்தல் பிரசாரத்தில் மோடி

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுகிறது, மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகி விட்டது.
மேற்கு வங்கத்தில் பாஜக அலை: தேர்தல் பிரசாரத்தில் மோடி


மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுகிறது, மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகி விட்டது. இதனால், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பீதியில் உள்ளார் என்று அந்த மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களவைத் தேர்தலில் 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி,  அந்த மாநிலத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள  வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் பாஜக எழுச்சி பெற்று வருகிறது. பாஜகவின் அலை வீசுவதையும் காண முடிகிறது. 
இதனால் தோல்வி பயத்தில் உள்ள மம்தா பானர்ஜி மிகவும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டுள்ளார். வன்முறையில் ஈடுபடுமாறு தனது குண்டர்களை அவர் ஏவி விட்டுள்ளார்.
கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். 
இதை ஒட்டுமொத்த தேசமே தொலைக்காட்சியில் பார்த்தது. அக்கட்சியின் குண்டர்கள் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,  துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கையில் எடுத்துள்ளனர்.
மம்தாவுக்கு மதிப்பளித்து, அவரை இந்த மாநில மக்கள் முதல்வராக்கினார்கள். ஆனால், அதிகார மமதை கொண்ட அவரோ, ஜனநாயகத்தைப் படுகொலை செய்து வருகிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அவர் தனது குணத்தைக் காட்டிவிட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு, பாஜகவை பழிவாங்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. சொன்னது போலவே, கொல்கத்தா பேரணியில் வன்முறையை நிகழ்த்தி அடுத்த 24 மணி நேரத்தில் தனது திட்டத்தை நிறைவேற்றி விட்டார்.
நிதி நிறுவன மோசடி மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தார் மம்தா. இது குறித்து கேள்வி எழுப்பினால் என் மீது வசை மாரி பொழிகிறார். அவரின் செயல்பாடுகளை ஒட்டுமொத்த தேசமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த மாநிலத்தின் கலாசார சீரழிவுக்கு மம்தாவே பொறுப்பாவார். அவரது எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்த மாநில மக்கள் தீர்மானித்து விட்டனர் .
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மம்தாவிடம் இரு பெண்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வியால், அவர்  மிகவும் கோபமடைந்தார். உடனே அந்த இரு பெண்களையும் திட்டிவிட்டு, பாதியிலேயே அங்கிருந்து ஆவேசமாக வெளியேறினார் மம்தா.
மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதில், மேற்கு வங்கத்தின் பங்களிப்பு கணிசமான அளவில் இருக்கும்  என்றார் பிரதமர் மோடி.

தேர்தல் பிரசாரத்தை இன்றே முடிக்க உத்தரவு
கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரசாரத்தை வியாழக்கிழமை (மே 16) இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிட்டதற்காக, முதன்மைச் செயலர் அட்ரி பட்டாச்சார்யா, சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் குமார் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதம்: மம்தா
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:


அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவை பயன்படுத்தும் அளவுக்கு மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படவில்லை. பிரசாரத்தை முன்கூட்டியே முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது சட்ட விரோதமானது; நெறியற்றது. உண்மையில், இந்த கட்டுப்பாடு, பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பரிசாகும். முற்றிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கொண்ட தேர்தல் ஆணையத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. மாநிலத்தில் இரு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நீக்கவில்லை; மோடியும், அமித் ஷாவும் அவர்களை நீக்கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com