
வாராணசியில் புதன்கிழமை காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா.
பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில், புதன்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸின் உத்தரப் பிரதேச கிழக்குப்பகுதி செயலாளர் பிரியங்காவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .
வாராணசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு முன்புறமுள்ள மதன் மோகன் மாளவியா சிலை அருகில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரியங்கா தொடங்கினார். அவர் செல்லும் வழி நெடுகிலும், சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பஹேல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றனர்.
அப்போது காங்கிரஸ் தொண்டர்கள், மோடிக்கு எதிரான கோஷங்களை முழங்கினர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, இங்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது, கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதன்பிறகு, வாராணசி வீதிகளில் மக்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது இப்போதுதான். சாலை வழிப்பிரசாரத்துக்கு விரிவான ஏற்பாடுகளை, உள்ளூர் காங்கிரஸார் செய்திருந்தனர். இப்பிரசாரம் தசாஷ்வாமத் பள்ளத்தாக்கு பகுதியில் நிறைவு பெற்றது. முன்னதாக, பிரியங்கா காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், கோட்வாலியில் உள்ள கால பைரவர் ஆலயத்துக்கும் சென்று தரிசனம் செய்தார்.
மோடி அரசு வலுவானதல்ல; கர்வமிக்கது: பிரியங்கா விமர்சனம்
சலேம்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் மிஸ்ராவுக்கு ஆதரவு தெரிவித்து கோரக்பூர் அருகே தேவ்ரியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியது: பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பு, அமேதியில் எனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அந்த தொகுதியின் மீது சிறப்பு கவனம் செலுத்தினார். பிரதமர் மோடி, மக்களுடனான தொடர்பை இழந்து விட்டார். அவரது மனது விசாலமானதாக இருக்குமேயானால், இந்த நாட்டில் விவசாயிகளின் நிலை ஏன் பரிதாபமாக இருக்கிறது? மக்கள் அவரை சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்றதை மட்டுமே கண்டு ரசித்திருக்கிறார்களே தவிர சாதாரண ஏழையின் வீடுகளுக்கு அவர் சென்றிருக்கிறாரா? அவர்களது பிரச்னை என்ன என்று ஏதாவது கேட்டிருக்கிறாரா?
மோடி அரசு வலுவானதல்ல; அவரது ஆட்சி கர்வம்மிக்கது. இந்த அரசு அடக்குமுறை கொண்டது. அவர்களது அகந்தைக்கு உதாரணமாக, அக்கட்சியின் தலைவர்கள் பேசுவதை தினந்தோறும் கேட்டாலே தெரியும்.
ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையான சக்தி மக்களின் கைகளில்தான் உள்ளது. ஆனால், மோடியோ தன்னுடைய கைகளில்தான் அனைத்து அதிகாரமும் உள்ளதாக கருதுகிறார்.
பாஜக அரசு வளர்ச்சி குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. மாறாக, வெற்று விளம்பரங்களில் மட்டுமே அரசின் வளர்ச்சியைப் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.
நான் என்னுடைய பிரசாரத்தை கங்கையில் இருந்து தொடங்கி வாராணசிக்கு வந்தடைந்துள்ளேன். வழிநெடுகிலும், வாராணசியில் மோடி மேற்கொண்டுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து கவனித்தபோதுதான், இங்கு எந்தவித வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிந்தது. வழியில், ஆழமான, திறந்தவெளி சாக்கடைகளையே அதிகளவில் பார்த்தேன்.
அதேசமயம், என்னுடைய 10ஆவது வயதில் எனது தந்தை ராஜீவ்காந்தி அமேதி தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டப்பிறகு, அங்கு சென்றபோது, பெரும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை காண முடிந்தது.
நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து விட்டனர். இதுகுறித்து, அவர் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறார். தங்கள் பிரச்னையை தீர்க்கக் கோரி பலமுறை, மோடியின் வாசல்கதவை விவசாயிகள் தட்டினர். ஆனால், அவர் தனது பிரமாண்டமான பங்களாவை விட்டு கடைசி வரை வெளியே வரவேயில்லை. மோடி அரசு தொழிலதிபர்களுக்கு மட்டுமே கடனுதவிகளை வழங்கியது. ஆனால், விவசாயிகளுக்கு மட்டும் கடனுதவியை வழங்க ஏன் மறுத்து விட்டது? என்று பிரியங்கா பேசினார்.
முன்னதாக, ரேபரேலியில் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் தாக்கப்பட்டதற்கு, பிரியங்கா கண்டனம் தெரிவித்தார்.