ஹபீஸ் சயீதுவின் உறவினர் கைது: பாகிஸ்தான் போலீஸார் நடவடிக்கை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுவின் உறவினர் அப்துல் ரஹ்மான்


மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுவின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கியை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக வட்டாரத்தை மேற்கோள்காட்டி, ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜமா உத் தவா அமைப்பின் அரசியல் பிரிவுக்கு அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். மேலும் ஃபலா- ஏ -இன்ஸானியத் அறக்கட்டளைக்கும் தலைமை வகித்து வந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அப்துல் ரஹ்மான் விமர்சித்து பேசியிருந்தார். மேலும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின்கீழ் அப்துல் ரஹ்மானை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமா உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதுவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா கடந்த 2012ஆம் ஆண்டு அறிவித்தது. அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்கப்படும் வழியை கண்காணிக்கும் எப்ஏடிஎஃப் அமைப்பு, ஜெய்ஷ் ஏ முகமது, லஷ்கர் ஏ தொய்பா, ஜமா உத் தவா ஆகிய அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக பாகிஸ்தானை சந்தேகப்படும் நாடுகளின் வரிசையில் பட்டியலிட்டது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதேபோல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் சொத்துகளையும் பாகிஸ்தான் அரசு முடக்கி வருகிறது. ஜெய்ஷ் ஏ முகமது உள்ளிட்ட 11 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது. ஜமா உத் தவா, ஃபலா-ஏ- இன்ஸானியத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com