Enable Javscript for better performance
அரசியல்வாதிகள் எதிரிகள் கிடையாது:  சுக்பீர் சிங் பாதல்- Dinamani

சுடச்சுட

    

    அரசியல்வாதிகள் எதிரிகள் கிடையாது:  சுக்பீர் சிங் பாதல்

    By DIN  |   Published on : 17th May 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sukhbir-Singh-Badal


    அரசியல்வாதிகள் எதிரிகள் கிடையாது; அரசியல் நிலைமை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றநிலை போல் இருக்கக் கூடாது என சிரோமணி அகாலி தளம் தலைவரும், ஃபெரோஸ்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.  
    பஞ்சாபில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:
    நாட்டுக்கு திறமையான, உறுதியான பிரதமர் தேவை. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, முடிவுகளைத் திறம்பட எடுக்கக் கூடிய ஒருவர் (நரேந்திர மோடி) பிரதமராக நாட்டுக்குக் கிடைத்துள்ளார். நாடு என்றும் தானாக இயங்காது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தக்கூடிய நபர், நாட்டுக்குத் தலைமை தாங்குவது அவசியம்.
    மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். நாட்டைத் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வதற்கு அவரே சிறந்த தலைவர் ஆவார். பிரதமர் பதவிக்கு ஏற்ற நபரும் அவர் ஒருவரே. 
    அரசியலில் பதற்றநிலை: தற்போது அரசியல்வாதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. அரசியல்வாதிகள் யாரும் எதிரிகள் கிடையாது. அரசியல் நிலைமை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றநிலை போல மாறிவருகிறது. இதுபோல் நிச்சயம் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட விஷயத்துக்காக அரசியல்வாதிகள் அனைவரும் ஓரணியில் திரளும் காலம் வரும்.
    பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அனைத்து துறைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. மாநில அரசாங்கம் முறையாகச் செயல்படவில்லை. முதல்வராக இருக்கும் தகுதியை அமரீந்தர் சிங் இழந்துவிட்டார். மாநில மக்களும் முதல்வருக்கு எதிரான மனநிலையிலேயே காணப்படுகின்றனர்.
    புனிதத்துக்குக் களங்கம்: ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம், பொற்கோயிலில் தாக்குதல் நடத்தி, அந்த இடத்தின் புனிதத் தன்மைக்கு காங்கிரஸ் களங்கம் ஏற்படுத்திவிட்டது. இதைவிடப் பெரிய குற்றம் எதுவும் இருக்க முடியாது. அதே போல் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திலும், அப்பாவி சீக்கியர்களை காங்கிரஸ் கொன்று குவித்தது.
    புதிய விஷயம் ஏதாவது வந்தால், அதை பஞ்சாப் மக்கள் உடனடியாக முயற்சி செய்து பார்ப்பார்கள். ஒருவேளை அந்த விஷயம் முறையாகச் செயல்படவில்லை எனில், அதை உடனடியாக அகற்றிவிடுவார்கள். அதுபோலவே, ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது.
    சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் கைப்பற்றிய தொகுதிகளை விட, இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai