சுடச்சுட

  

  காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழப்பு

  By DIN  |   Published on : 17th May 2019 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kashmir

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை வியாழக்கிழமை சுற்றிவளைத்த ராணுவ வீரர்கள்.


  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த 6பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல், ராணுவ வீரர் உள்பட 2 பேரும் சண்டையில் உயிரிழந்தனர்.
  புல்வாமா மாவட்டம், திலிபோரா பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. 
  இதன்பேரில், அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அருகில் இருக்கும் வீடுகளில் வசித்து வரும் மக்களை முன்னெச்சரிகையாக  அங்கிருந்து வெளியேற்றினர்.
  இதைக் கண்ட பயங்கரவாதிகள், வீட்டுக்குள் இருந்தபடி பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் ராணுவ வீரர் சந்தீப் என்பவரும், கிராமவாசி ரயீஸ் தர் என்பவரும் உயிரிழந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினர் தாக்குதல் தொடுத்தனர்.
  இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்தச் சண்டையின் முடிவில், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 6 பேரும், புல்வாமாவை சேர்ந்த நஸீர் பண்டித், சோபியானை சேர்ந்த உமர் மீர், பாகிஸ்தானை சேர்ந்த காலித் என்பது விசாரணையில் தெரிந்தது.
  பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் ஆகியோரை குறிவைத்து காஷ்மீரில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஆயுதங்களை பறித்து சென்ற சம்பவங்கள் ஆகியவற்றில் 6 பேருக்கும் தொடர்பு உண்டு. 
  குறிப்பாக, பாகிஸ்தானை சேர்ந்த காலித், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் உள்ளூர் கமாண்டராக செயல்பட்டு வந்தார். இவர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், இவர்களை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
  பொது மக்கள் ஆர்ப்பாட்டம்: இதனிடையே, பதேர்வா பகுதியில் சந்தேகம் அளிக்கும்  வகையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பதேர்வா காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த 5 வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
  இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பதேர்வா பகுதியில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்லிடப் பேசி இணைய சேவை தாற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai