சுடச்சுட

  

  வித்யாசாகர் சிலையை புதுப்பிக்க பாஜகவின் நிதி தேவையில்லை: மம்தா பானர்ஜி

  By DIN  |   Published on : 17th May 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamtha1


  சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை புதிதாக அமைக்க பாஜகவின் பணம் எங்களுக்குத் தேவையில்லை; புதிய சிலையை அமைக்க மேற்கு வங்கத்திடம் போதிய நிதி உள்ளது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
  கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை மூண்டது. இந்த வன்முறையின்போது பாஜகவினரும், திரிணமூல் காங்கிரஸாரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.
  இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வித்யாசாகர் சிலை முன்பிருந்த இடத்தில் புதிதாக கட்டித் தரப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
  இந்நிலையில், மந்திர்பஜாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், வித்யாசாகரின் சிலையை புதிதாக அமைக்க பாஜகவின் பணம் தங்களுக்கு வேண்டாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:
  கொல்கத்தாவில் வித்யாசாகரின் சிலையை புதிதாக அமைக்கப்படும் என்று மோடி வாக்குறுதியளித்துள்ளார். பாஜகவின் பணம் எங்களுக்கு ஏன் வேண்டும்? மேற்கு வங்கத்திடம் தேவையான பணம் உள்ளது.
  சிலைகளை உடைத்தெறிவது பாஜகவின் கலாசாரம். இதைத்தான் திரிபுராவில் பாஜக செய்தது. மேற்குவங்கத்தில் 200 ஆண்டுகால பாரம்பரிய சிலையை பாஜக உடைத்துள்ளது. இத்தகைய கட்சியை ஆதரிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
  சமூகவலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி, மேற்கு வங்க மக்களை தூண்டிவிடும் செயலிலும், கலவரத்தை ஊக்குவிக்கும் செயலிலும் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார் மம்தா.
  எதிர்க்கட்சிகளுக்கு மம்தா நன்றி:
  இதனிடையே, மேற்கு வங்கத்தில் மக்களவைக்கான தேர்தல் பிரசார நேரத்தை தேர்தல் ஆணையம் புதன்கிழமை குறைத்தது. இதற்கு மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ் மற்றம் பிறருக்கு இந்த விவகாரத்தில் எனக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் ஆதரவளித்ததற்கு நன்றி. பாஜக உத்தரவின்பேரில், தேர்தல் ஆணையம் பாகுபாட்டுடன் செயல்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai