சுடச்சுட

  
  poll

  ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் 59 மக்களவைத் தொகுதிகளில், 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.
  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 
  6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிக்கை, ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்ரல் 30-இல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
  கடைசிக் கட்டமாக நடைபெறும் தேர்தலில், பிகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், சண்டீகரில் ஒரு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 13 தொகுதிகள், ஹிமாசலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
  இதனிடையே, கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றபோது வன்முறை மூண்டதால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
  இதனால், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளைத் தவிர, மற்ற 50 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவுபெறுகிறது. 
  பிரசாரத்துக்கான கடைசி நாளில், சூறாவளி பயணம் மேற்கொள்வதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஏற்கெனவே நடந்து முடிந்த 6 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளும் சேர்த்து, வரும் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.


  தமிழகத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் 19-இல் தேர்தல்

  தமிழகத்தில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வந்த பிரசாரம் வெள்ளிக்கிழமை  மாலையுடன் ஓய்கிறது. தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-இல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
  மேலும், தருமபுரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 13 வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
  தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அவர்கள்  பணியாற்றவிருக்கும் வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அளிக்கப்பட உள்ளன.
  அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பிரசாரத்தை ஏற்கெனவே நிறைவு செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது பிரசாரத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்கின்றனர்.
  வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன்பின்பு, தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் அனைவரையும் வெளியேற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளது. தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடங்கியுள்ள டாஸ்மாக் கடைகளை மூடவும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai