அமெரிக்க குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர டிரம்ப் திட்டம்: இந்தியர்களுக்கு சாதகம்

கல்வி மற்றும் பணி தகுதிகள் அடிப்படையில் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர டிரம்ப் திட்டம்: இந்தியர்களுக்கு சாதகம்


கல்வி மற்றும் பணி தகுதிகள் அடிப்படையில் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு சாதகமாக அமையும்.
அமெரிக்காவில் குடும்பசொந்தங்கள் அடிப்படையில் தற்போது நிரந்தரக் குடியுரிமையான கிரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய திட்டத்தின்படி, கல்வித் தகுதி மற்றும் பணியில் சிறந்துவிளங்கும் நபர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்குப் பெரிதும் பயனளிக்க உள்ளது. ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்று வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர். தற்போது கிரீன் கார்டு வைத்துள்ளவர்களில் 66 சதவீதம் பேர் குடும்ப உறவுகள் அடிப்படையிலும், 12 சதவீதம் பேர் தகுதி அடிப்படையிலும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், டிரம்ப்பின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் விளக்கிவிட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொண்டால், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பிரச்னையாக எழுப்பவும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஆண்டுதோறும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com