கோட்சே பற்றிய பிரக்யா சிங் தாக்குர் கருத்து: மோடி மன்னிப்புக்கோர காங்கிரஸ் வலியுறுத்தல்

கோட்சேவை உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோட்சே பற்றிய பிரக்யா சிங் தாக்குர் கருத்து: மோடி மன்னிப்புக்கோர காங்கிரஸ் வலியுறுத்தல்


கோட்சேவை உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரும், போபால் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே ஓர் உண்மையான தேசபக்தர் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரக்யா சிங் தாக்குரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜகவினர் அனைவரும் கோட்சேவின் வழித்தோன்றல்கள். அவர்கள், கோட்சேவை தேசபக்தர் என்றும், ஹேமந்த் கர்கரேவை தேசத்துரோகி என்றும் கூறுவார்கள். (ஹேமந்த் கர்கரே, மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது குண்டு வெடிப்பில் உயிர்த்தியாகம் செய்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்). வன்முறைக் கலாசாரமும், தியாகிகளை அவமதிப்பதும் பாஜகவினரின் மரபணுவிலேயே உள்ளது.
பிரதமர் மோடி-பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்குப் பிடித்தமான பாஜக தலைவரான பிரக்யா சிங் தாக்குர், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஓர் உண்மையான தேசபக்தர் என்று கூறியதன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்து விட்டார். 
இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ச்சியாகத் தெரிவிப்பதன் மூலம், பாஜக தனது கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் வழியாக மகாத்மா காந்தியின் சிந்தனைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது, காந்தியின் கொள்கைகளை அவமதிப்பதற்கான சதித் திட்டமாகும். இது, மன்னிக்க முடியாத குற்றம்; இந்த தேசம் அவரை மன்னிக்காது.
இதுதொடர்பான சரியான புரிதல் இருந்தால், பிரக்யா சிங் தாக்குரை பிரதமர் மோடி தண்டிக்க வேண்டும்; அதுமட்டுமன்றி, அவர் மன்னிப்புக் கோரவும் வேண்டும் என்று அந்த அறிக்கையில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
தேசவிரோதச் செயல் - திக்விஜய் சிங்: கோட்சேவை துதிபாடுவது, தேசவிரோதச் செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். போபால் மக்களவைத் தொகுதியில் பிரக்யா சிங் தாக்குரை எதிர்த்துப் போட்டியிடும் இவர், உஜ்ஜைன் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தேசத்தந்தைக்கு எதிராக, பிரக்யா சிங் தெரிவித்த கருத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தெரிவித்த கருத்துக்காக, பிரதமர் மோடியும், அமித் ஷாவும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோட்சே ஒரு கொலைகாரர். அவரை துதி பாடுவது, தேசபக்தியை வெளிப்படுத்தும் செயல் அல்ல; தேச விரோதச் செயல் என்றார் திக்விஜய் சிங்.
பாஜகவின் உண்மை முகம்- என்சிபி: பிரக்யா சிங் தாக்குரின் கருத்து மூலம் பாஜகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்து விட்டனர் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாதுராம் கோட்சேவை ஆதரித்துப் பேசியுள்ள பிரக்யா சிங் தாக்குர், அவரை தேசபக்தர் என்று கூறியுள்ளார். அவரது பேச்சின் மூலமாக, பாஜகவின் உண்மை முகத்தை மக்கள் கண்டு கொண்டுவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒமர் கேள்வி: காந்தியைக் கொலை செய்தவர் தேசபக்தர் என்றால், காந்தி என்ன தேசவிரோதியா? என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தனது சுட்டுரைப் பக்கத்தில், பிரக்யா சிங் தாக்குரின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கோட்சே குறித்து பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com