பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்: மே 23-இல் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்: மே 23-இல் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுடன் இது தொடர்பாக ரகசியப் பேச்சு நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் 23-ஆம் தேதி அன்றே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தில்லியில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், அக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதை அக்கட்சி வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மே 23-இல் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த  இருப்பது உறுதியாகிவிட்டது.
பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது: காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. கடந்த தேர்தலைப் போல, இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்காது என்று கூறப்படுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. எனவேதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பிராந்தியக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்லவும் காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் இக்கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நாட்டிலேயே மிக அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளை இந்த இரு கட்சிகளும் வெல்லும் என்று அக்கட்சிகளும், காங்கிரஸும் கூட எதிர்பார்க்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க அகிலேஷ், மாயாவதி ஆகியோருக்கு சோனியா ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டார்.

பாஜக, காங்கிரஸ் என இரு அணிகளுக்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்கும் முனைப்பில் இருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், இவர்கள் இருவருமே தங்கள் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் முயற்சி: பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காத நிலை ஏற்படும்போது, உடனடியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ஆட்சி அமைக்க உரிமைகோருவதுதான் காங்கிரஸின் முக்கிய வியூகமாக உள்ளது. ஏனெனில், சில மணி நேரம் கூடுதலாக நேரம் கிடைத்தால் கூட, சில கட்சிகள் பாஜக கூட்டணி பக்கம் சாய்ந்துவிட வாய்ப்பு உள்ளதால், வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் நாளிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளையும் தங்களுடன் இணைத்துவிட காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
ஸ்டாலின், சரத் பவார் பங்கேற்பது உறுதி: காங்கிரஸ் நடத்தும் இந்தக் கூட்டத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.

சோனியாவின் அரசியல்: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலுக்கு அளித்துவிட்ட பிறகு, பிரசாரத்தில் ஈடுபடுவதை சோனியா தவிர்த்துவிட்டபோதிலும், காங்கிரஸ் கட்சியை அவர்தான் பின்னால் இருந்து இயக்கி வருகிறார். அதுவும் இப்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அவர் தீவிரமாக உள்ளார். தேர்தல் முடிவு வெளியாகும் முன்பு, சமாஜவாதி, பகுஜன்சமாஜ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்ய அவர் முயற்சித்து வருகிறார். 
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா உள்ளிட்டோரிடம் சோனியா ஒருசில முறை பேசியுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைப்பாட்டை அறிவிக்க அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோர் விரும்பியதால் தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணி அமைக்கும் சோனியாவின் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
பிரதமர் பதவி முக்கியமில்லை:  பிரதமர் பதவி கூட முக்கியமில்லை; மோடியின் ஆட்சி தொடரக் கூடாது என்ற இலக்கிலேயே காங்கிரஸின் வியூகம் அமைத்துள்ளது. இதனை அண்மையில் வெளிப்படையாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், கருத்தொற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்போம். 
மற்றபடி மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்றார். முன்னதாக, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறி வரும் காங்கிரஸ் கட்சிக்கு, பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறும்  துணிவு  இருக்கிறதா? என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே காங்கிரஸின் நோக்கத்தை ஆஸாத் வெளிப்படுத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com