பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாக கருத முடியாது

பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாக கருதி தீர்ப்பளிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாக கருத முடியாது


பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாக கருதி தீர்ப்பளிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 19 வயது இளைஞரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சுனில் செல்வே மற்றும் அவரது 2 நண்பர்களால் கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றம், சுனில் உள்ளிட்ட 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுனில் செல்கே மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், திருமண முயற்சி தோல்வியடைந்து விட்டதால், தமக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகாரை அப்பெண்ணும், தாயாரும் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேவதி மொஹித் ரே தனது தீர்ப்பை வியாழக்கிழமை வெளியிட்டார். அவர் கூறுகையில்,  பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாக கருத முடியாது. இந்த வழக்கில் பெண்ணுக்கும், மனுதாரருக்கும் திருமண பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் தினத்துக்கு முந்தைய இரவில் இருவரும் ஒன்றாக சென்றிருக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்களும் தெரிந்து வைத்துள்ளனர். இந்த பின்னணியிலும், கிடைத்துள்ள ஆதாரத்தை அடிப்படையாக வைத்தும் பார்க்கையில், திருமண முயற்சி கைகூடாத நிலையில், மனுதாரர் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல், பெண்ணின் உடலை பரிசோதித்து அளிக்கப்பட்ட அறிக்கையிலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இத்தகைய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் நம்பகமானதாகவும், தெளிவானதாகவும் இருத்தல் வேண்டும். அதுபோல நம்பிக்கையை அளிக்கும் வகையில், பெண்ணின் வாக்குமூலம் இல்லாது போகும்பட்சத்தில், சந்தேகத்தின் பலன், சம்பந்தப்பட்ட ஆடவருக்குதான் அளிக்கப்படும் என்றார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com