பிராந்திய கட்சிகளின் கூட்டணியால் மத்தியில் நிலையான அரசை தர இயலாது

பிராந்திய கட்சிகளால் மத்தியில் நிலையான அரசை தர இயலாது; அந்த அரசு முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
பிராந்திய கட்சிகளின் கூட்டணியால் மத்தியில் நிலையான அரசை தர இயலாது


பிராந்திய கட்சிகளால் மத்தியில் நிலையான அரசை தர இயலாது; அந்த அரசு முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் வீரப்ப மொய்லி மேலும் கூறியதாவது:
கடந்த காலத்திலும் பிராந்திய கட்சிகளைக் கொண்ட மத்தியில் அரசுகள் பதவியேற்றன. அந்த அரசுகளுக்கு சக்திவாய்ந்த தலைவர்களான வி.பி. சிங், சரண் சிங், சந்திரசேகர் தலைமை வகித்தனர். எனினும் அவர்களால் நிலையான அரசை தர இயலவில்லை. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இதேபோல், மத்தியில் பிராந்திய கட்சிகள் ஆட்சியமைத்தால், அந்த அரசு ஒன்றிரண்டு மாதங்களோ அல்லது 2 ஆண்டுகளோதான் நீடிக்கும்.
எதிர்காலத்தில், பிராந்திய கட்சிகளுக்கு தேசிய கட்சி தலைமை வகித்தால் மட்டுமே நிலையான அரசை தர முடியும். மத்தியில் பிராந்திய கட்சிகள் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அது வலுவான அரசாக இருக்காது. அந்த அரசும் நிலையானதாகவும் இருக்காது. தேசிய கட்சி தலைமை வகித்தால் மட்டும்தான் நிலையான அரசை தர முடியும்.
தேர்தலில் பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெல்லும் பட்சத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்காது எனத் தெரிவிக்கப்படுவது குறித்து கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் அக்கட்சிகளுக்கு யார் தலைமை வகிக்கப் போகிறார்கள் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய பொதுவான குறிக்கோள் அவசியம். அக்கட்சிகளை ஓரணியில் திரட்ட தேசிய கட்சி ஒன்று அவசியமாகும்.
தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லையெனில், கூட்டணியில் இல்லாத ஒத்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து, நாட்டு நலனுக்காகவும், நிலையான அரசை தரவும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். இதற்கு ராகுல் காந்தி ஒப்புதல் அளிப்பார் என நினைக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சேரலாம் அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து அக்கட்சி ஆதரவளிக்கலாம். இதற்கு வாய்ப்புள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் 3ஆவது அணி அமைக்கும் முயற்சி சாத்தியமாகாது. 3ஆவது அணி அமைத்து, புதிதாக அமையும் அரசிடம் பேரம் பேசி முக்கிய பதவியை பெற அவர் முடிவு செய்திருக்கலாம் என  நினைக்கிறேன் என்றார் மொய்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com