மம்தாவுக்கு மாயாவதி ஆதரவு

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை பாஜக திட்டமிட்டு எதிர்த்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மம்தாவுக்கு மாயாவதி ஆதரவு


முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை பாஜக திட்டமிட்டு எதிர்த்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நாளும் மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவால் எதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் தொடர்புடைய வன்முறைகளை பார்க்கும்போது, பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் திட்டமிட்டே சதியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
மோடி அரசின் தோல்விகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே மம்தா பானர்ஜி அரசை பாஜக குறிவைத்து தாக்கி வருகிறது.  
மத்திய அரசு கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. 
வியாழக்கிழமையுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றார் மாயாவதி.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
அவர் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்துடன் பாஜக கரம் கோத்து செயல்பட்டு வருகிறது. ஆனால், மே 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் மம்தா பானர்ஜியின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com