சுடச்சுட

  


  புவனேசுவரம்: பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே இடைவெளி நீடித்து வந்த நிலையில், இனிமேல் அக்கட்சிகளுக்கிடையே தூரத்தை கடைபிடிக்க போவதில்லை என்றும், ஒடிஸாவை ஆதரிக்கும் கட்சிக்கு எங்களது ஆதரவை அளிப்போம் என்றும் பிஜு ஜனதாதளம் (பிஜேடி) தெரிவித்துள்ளது. 

  கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும் ஒடிஸாவில் பாஜகவுடன், பிஜேடி கூட்டணி அமைத்திருந்தது.  கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலின்போது, இரு கட்சிகளுக்குமிடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால்  கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணி முறிந்ததையடுத்து பாஜகவை மதவாத கட்சி என்றும், காங்கிரûஸ ஊழல் நிறைந்த கட்சி என்றும் பிஜேடியின் தலைவரும், ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் விமர்சித்து வந்தார். 

  இந்நிலையில் பிஜேடி துணைத்தலைவர் மற்றும் அமைச்சருமான எஸ்.என்.பத்ரோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
  இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிஜேடி இடைவெளி வைத்திருந்த நிலையில், இனிமேல் இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான தூரத்தை கடைபிடிக்க போவதில்லை. எங்களை பொருத்தவரை ஒடிஸாவின் நலனை பாதுகாக்கும் கூட்டணிக்கே பிஜேடி ஆதரவளிக்கும்.
  குறிப்பாக, ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவளிக்கப்படும். 

  இந்தக் கோரிக்கையை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.  

  வரும் 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு பிராந்திய கட்சிகளின் கூட்டணியுடன் மூன்றாவது அணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்திருந்தார். 

  மூன்றாவது அணி அமையும்பட்சத்தில் நவீன்பட்நாயக், பிரதமராக வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் பத்ரோவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பத்ரோ, ஒடிஸா மக்களும், நாட்டு மக்களும் நவீன் பட்நாயக்தான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai