
தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
புது தில்லி: கோட்சே குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த பிரக்யா, நளின் குமார் கதீல், அனந்த்குமார் ஹெட்கே ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மூவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கோட்சே குறித்து கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பாஜகவினர் அனைவரும் வருந்துகிறோம். பிரதமர் மோடியும் வருத்தத்தில் உள்ளார்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாள்களுக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டது. சம்ஜௌதா குண்டு வெடிப்பு வழக்கில், உண்மையில் தொடர்புடையது லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புதான். அமெரிக்க நிறுவனங்களும் இதையே தெரிவித்தன.
ஆனால், இந்த குண்டு வெடிப்பு ஹிந்து பயங்கரவாதம் என்று கூறி, ஹிந்து தலைவர்களுக்கு எதிராக போலி வழக்கை பதிவு செய்தது. ஆனால், அவர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுவித்து நஷ்ட ஈடும் அளிக்க உத்தரவிட்டது. போலி வழக்கை பதிவு செய்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அமித் ஷா.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான பிரக்யா தாக்குர், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை "தேச பக்தர்' என்று கூறினார். எனினும், சில மணி நேரங்களுக்கு பிறகு, தனது சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்பு கோரினார் பிரக்யா.
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. நளின் குமார் கதீலும் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "கோட்சே ஒருவரை கொன்றார். பயங்கரவாதி அஜ்மல் கசாப் 72 பேரைக் கொன்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 17,000 பேரைக் கொன்றார். யார் இவர்களில் கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெட்கேவும் கோட்சேவை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து கூறியிருந்தார்.
எனினும், தனது சமூக வலைதள கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டுவிட்டதாக பின்னர் கூறினார்.
முன்னதாக, சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோட்சே தொடர்பாக மூவரும் தெரிவித்துள்ள கருத்து கட்சியின் சித்தாந்த கொள்கைகளுக்கு எதிரானதாகும். அவர்களது கருத்துகளை கட்சி தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.
கோட்சே குறித்து கூறியுள்ளது அவர்களது சொந்த கருத்து. இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கோட்சே தொடர்பாக கூறிய கருத்தை பிரக்யா திரும்ப பெற்றுள்ளதுடன் அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் என்று சுட்டுரையில் அமித் ஷா
தெரிவித்துள்ளார்.