
கலபுர்கி: நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
தென் கன்னட மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் நளின்குமார் கட்டீல், வியாழக்கிழமை தனது டுவிட்டரில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலைகாரர் என்று விமர்சித்திருந்தார். இதனைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மல்லிகார்ஜுன செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலைகாரர் என்பது போல் பாஜக மக்களவை உறுப்பினர் நளின்குமார் கட்டீல் பதிவிட்டுள்ளார். இது அவர் சார்ந்துள்ள கட்சியின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. காந்திஜியை கொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என்றும், ராஜீவ் காந்தியை கொலைகாரர் என்று கூறும் நளின்குமாரின் பதிவு கண்டிக்கத்தக்கது.
டுவிட்டரில் நளின்குமார் கட்டீல் செய்த பதிவுக்கு கண்டனம் வலுத்தவுடன், அதனை நீக்கியுள்ளார். என்றாலும், இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் என்றார்.
நளின்குமார் கட்டீலின் பதிவை துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், டி.கே. சிவக்குமார் ஆகியோரும் கண்டித்துள்ளனர்.