Enable Javscript for better performance
பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்: சந்திரபாபு நாயுடு- Dinamani

சுடச்சுட

  

  பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்: சந்திரபாபு நாயுடு

  By DIN  |   Published on : 18th May 2019 06:33 AM  |   அ+அ அ-   |    |  

  kej-naidu  புது தில்லி: பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதற்காக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மட்டுமன்றி பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரும் 23-ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைந்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கு சந்திரபாபு தீவிரமாக முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து அவர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசித்ததாகத் தெரிகிறது.

  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்ட போதிலும், தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் தங்களது ஆம் ஆத்மி மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் எத்தகைய முக்கியப் பங்கு வகிக்கும் என்பது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பின்போது, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் உடனிருந்தனர். 

  அதைத் தொடர்ந்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், லக்னெüவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் அவர் சனிக்கிழமை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதற்கிடையே, ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரகிரி தொகுதியில் மறுதேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து சந்திரபாபு நாடு முறையிட்டார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜக, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "டிஆர்எஸ் மட்டுமன்றி பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம். நான் ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். அனைத்து தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அது தொடர்பான திட்டம் வகுக்கப்படும்' என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது: 

  தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அரசுக்கு ஆதரவாகவும், ஒருதலைபட்சமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன. எனது 25 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், தேவையின்றி தலையிடும் தேர்தல் ஆணையத்தை நான் கண்டதில்லை. மேற்கு வங்கத்தில் முதன்மைச் செயலரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது. அந்த மாநிலத்தில் திடீரென்று முன்கூட்டியே பிரசாரத்தை முடித்துக் கொள்ள உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பொதுக் கூட்டம் முடிவடைவதற்கு அவகாசம் அளித்தது.

  மேலும், மகாத்மா காந்தியை அவமதித்த பிரக்யா சிங் தாக்குர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

  இதேபோல், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக எம்.பி.க்கள் யார் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

  kattana sevai