சுடச்சுட

  
  Rajnath Singh meeting


  புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370, 35ஏ பிரிவுகளை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று கூறி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும், 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், 370-ஆவது சட்டப்பிரிவை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதால், காஷ்மீர் பிரச்னை சரியாகிவிடுமா? சட்டப்பிரிவை ரத்து செய்வது சவாலான காரியமில்லையா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள்.

  காஷ்மீர் பிரச்னை சவாலான ஒன்றுதான். ஆனால் அதற்கு விரைவில் தீர்வு காணப்படும். அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை உண்மையில் காஷ்மீருக்கு பலனளிக்கிறதா அல்லது பாதிப்பளிக்கிறதா என்று மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.

  காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படாதது குறித்த கேள்விக்கு, "ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்' என்றார்.

  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்குச் சட்டங்களை இயற்றும் சிறப்பு அதிகாரங்களை வழங்குவதுடன், பொதுப்பட்டியல் மற்றும் மத்திய பட்டியலில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதியளிக்கிறது. இந்தச்  சட்டப்பிரிவின் மூலமே, ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களுக்குச் சிறப்புக் குடியுரிமை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai