இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. கடந்த 38
இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது


புது தில்லி: மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. கடந்த 38 நாள்களாக, நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடும் வாராணசி உள்பட 13 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், சண்டீகரில் ஒரு தொகுதி,  ஹிமாசலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனிடையே, கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றபோது வன்முறை மூண்டதால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் வெள்ளிக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்த தேர்தலுக்காக, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர். 

இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த தேர்தலில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

மறுபுறம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் அடுத்து ஆட்சியமைக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

7-வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஏற்கெனவே நடந்து முடிந்த 6 கட்டத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் சேர்த்து, வரும் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com