பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம்: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரிவினைவாதிகள்


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரிவினைவாதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக, மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, ஸ்ரீநகர் உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.  அரசு பேருந்துகள் இயங்கவில்லை. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இப்போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

2-ஆவது நாளாக ஊரடங்கு: இதனிடையே, தோடா மாவட்டத்தின் பதர்வா பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இங்கு நயீம் அகமது ஷா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, உள்ளூர் மக்கள் வியாழக்கிழமை பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பசு வதை தடுப்பு என்ற பெயரில் இக்கொலை நடைபெற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானதால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பதர்வா பள்ளத்தாக்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

இதுதொடர்பாக தோடா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாகர் கூறுகையில், "நயீம் கொலை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயீமின் குடும்பத்தினருடன் நாங்கள் பேசியுள்ளோம். இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com