சுடச்சுட

  

  பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்காதது ஏன்? - மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

  By DIN  |   Published on : 19th May 2019 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Narendra_Modi_PTI1  புது தில்லி: பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பாஜக தலைவர் அமித் ஷாவை பதிலளிக்க வைத்தது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

  மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற காலத்தில் இருந்து, இதுவரை பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்ததில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.

  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அமித் ஷா பதிலளித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து, மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

  இதுகுறித்து சுட்டுரையில், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவுகளில், "வளர்ச்சி கேள்வி கேட்கிறது: பிரதமரின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தீர்களா? என்று. வானொலிக்குப் பதிலாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கடைசி மனதின் குரல் போல் அந்த சந்திப்பு இருந்தது. செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளுடன் அமர்ந்திருந்தனர். ஆனால் கட்சி விதிக்கு கட்டுப்பட்ட வீரர் தொடர்ந்து மௌனம் காத்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பத்திரிகையாளர்கள் போல வேடமிட்டு வந்திருந்த பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க அமித் ஷா மறந்து விடக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி. ராஜா, "பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன இருந்தது? ரஃபேல் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்க வேண்டும். பிரதமருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆதலால் அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தால், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பது தெரிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் கூறுகையில், "பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்தார். ஆனால் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதிலிருந்து தேர்தல் தோல்விக்கு, அமித் ஷாவை பலிகடா ஆக்கப் போகிறேன் என்ற செய்தியை மோடி வெளியிட்டுள்ளார்' என்றார்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவுகளில், "மோடியின் முதலாவது மற்றும் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பு, அமித் ஷா உதவியுடனே நடைபெற்றது. ஒரு மணி நேர உரையை பார்த்து, பத்திரிகையாளர்கள் களைபடைந்து விட்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியும் இல்லை; பதிலும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai