
அகர்தலா: திரிபுரா(மேற்கு) மக்களவைத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில், திரிபுரா(மேற்கு ) தொகுதிக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதியும், திரிபுரா(கிழக்கு) தொகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
திரிபுரா (மேற்கு) தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின்போது, மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியினரால் பெரிய அளவில் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதையடுத்து, அந்த தொகுதியில் உள்ள 1679 வாக்குச்சாவடிகளில், 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து விட்டு, அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான சங்கர் பிரசாத் தத்தா கடந்த 15-ஆம் தேதி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, "திரிபுரா(மேற்கு) மக்களவைத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.