சுடச்சுட

  
  mayavathi


  லக்னெள: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் 1977-ஆம் ஆண்டு நிகழ்ந்தது, தற்போது வாராணசியில் நிகழுமா என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வினவியுள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவதை விட அவர் தோல்வி அடைந்தால், அது மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் 1977-ஆம் ஆண்டு போட்டியிட்ட அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு மாயாவதி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

  உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர். கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர். பிரதமர் மோடியின் வெற்றியை விட அவரது தோல்வி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது வாராணசியில் மீண்டும் நிகழுமா?

  குஜராத் வளர்ச்சி மாதிரி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்புவாரியான வன்முறையையும், ஜாதி ரீதியிலான கலவரத்தையும் மத்திய, மாநில பாஜக அரசுகள் தூண்டி வருகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று மாயாவதி கூறியுள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai