காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடைபெற்ற


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், புல்வாமாவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர், கடந்த ஆண்டு ராணுவ வீரர் ஒளரங்கசீப்பை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.

இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள பன்ஸ்காம் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சனிக்கிழமை அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர், பன்ஸ்காம் பகுதியைச் சேர்ந்த ஷோகத் தார் ஆவார். 

மற்றொருவர், சோபூரைச் சேர்ந்த இர்பான் வார்; மூன்றாவது பயங்கரவாதி, புல்வாமாவைச் சேர்ந்த முசாபர் ஷேக் ஆவார். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் மூவருக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புல்வாமாவில் கடந்த ஆண்டு ஒளரங்கசீப் என்ற ராணுவ வீரர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், அதே ஆண்டில் அகமது வாகே என்ற காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பயங்கரவாதி ஷோகத் தொடர்புடையவர். மேலும், பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களிலும் தொடர்புடையவர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாரமுல்லாவில்...: இதனிடையே, பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com