கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் விரைவில் கைது: சிபிஐ சூசகம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விரைவில் கைது செய்ய இருப்பதாக, சிபிஐ


கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விரைவில் கைது செய்ய இருப்பதாக, சிபிஐ சூசகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
ராஜீவ் குமாருக்கும், சாரதா நிதி நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாட ல் விவரங்களை சிபிஐயிடம் இரண்டு தனியார் நிறுவனங்கள் அளித்துள்ளன. அவற்றில்,  நிதி நிறுவனத்தின் தலைவர் சுதீப்தா சென், அவருடைய நெருக்கமான நண்பர் தேவ்ஜனி முகர்ஜி ஆகியோரின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக, ஷில்லாங்கில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விசாரணையின்போது ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவரைக் கைது செய்வதற்கு மட்டுமன்றி, அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வரும் 24-ஆம் தேதிக்குப் பிறகு ராஜீவ் குமார் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார் அந்த அதிகாரி.

சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கொல்கத்தா காவல் துறை ஆணையராக இருந்த ராஜீவ் குமார் தலைமையில் கடந்த 2013-இல் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே ஆண்டில், சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதீப்தா சென்னை சிபிஐ கைது செய்தது. அப்போது, சில அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிக அளவில் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கை, ராஜீவ் குமார் விசாரித்து வந்தபோது சில முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டதாகவும், சில ஆவணங்களை அவர் சிபிஐயிடம் மறைத்துவிட்டதாகவும் சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை மேற்கு வங்க காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், விசாரணை நடத்த அனுமதி மறுத்துவிட்டனர். 

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இதையடுத்து, அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை விலக்கி, இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com