தேர்தல் ஆணையத்தில் பிளவை ஏற்படுத்துகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தில் பாஜக தலைமையிலான அரசு பிளவை ஏற்படுத்தி வருவதாகவும், நாட்டிலுள்ள அரசு அமைப்புகளின் நேர்மையைக்
தேர்தல் ஆணையத்தில் பிளவை ஏற்படுத்துகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு


புது தில்லி: தேர்தல் ஆணையத்தில் பாஜக தலைமையிலான அரசு பிளவை ஏற்படுத்தி வருவதாகவும், நாட்டிலுள்ள அரசு அமைப்புகளின் நேர்மையைக் குலைக்க முயற்சி செய்துவருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அந்தப் புகார்களை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரும்பான்மை அடிப்படையில், இதில் முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதே போல் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் தொடர்பான ஆய்வில், லவாசாவின் கருத்துகள் பல முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் தொடர்பாக இனி நடைபெற உள்ள கூட்டங்களில், தான் பங்கேற்கப் போவதில்லை என தேர்தல் ஆணையத்துக்கு லவாசா கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்களில் செய்திகளில் வெளியாகின.

இச்செய்தியைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மீதான புகார்களைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு ஆணையர் அசோக் லவாசா பலமுறை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது கருத்தைப் பதிவு செய்வதற்குக் கூட தேர்தல் ஆணையம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.

நேர்மைக்கு பாதிப்பு: அரசமைப்புச் சட்டப்படி, பெரும்பான்மை கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், எதிரான கருத்துகளும் பதிவுசெய்யப்பட வேண்டும். ஆனால், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் காக்கும்நோக்கில் தேர்தல் ஆணையம் நடந்துவருகிறது. பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவித்ததற்காக லவாசாவின் கருத்துகளைப் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நேர்மைத்தன்மையைக் குலைத்துள்ளது.

இது மக்களாட்சியில் மற்றொரு கருப்பு தினமாகும். நாட்டிலுள்ள அரசு அமைப்புகளின் நேர்மையைக் குலைக்க பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்; ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜிநாமா செய்கிறார்; சிபிஐ இயக்குநர் பணிநீக்கப்படுகிறார்; தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொய்யான அறிக்கைகளை அளிக்கிறார். தற்போது, தேர்தல் ஆணையத்தில் பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. இன்னும் 5 நாள்களில் 5 ஆண்டு கால மோசமான ஆட்சியை வெளியேற்ற மக்கள் தயாராகிவிட்டனர். லவாசாவின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் தேர்தல் ஆணையம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளுமா என்று ரண்தீப் சுர்ஜேவாலா வினவியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "லவாசாவின் புகார்கள் பெரும் ஆபத்து நிறைந்தவை. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com