சுடச்சுட

  

  குவாலியர்: கோட்சே பிறந்தநாளை கொண்டாடிய இந்து மகா சபை தொண்டர்கள்

  By DIN  |   Published on : 20th May 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பிறந்த தினத்தை, இந்து மகாசபை தொண்டர்கள் கொண்டாடினர். 
  முந்தைய பம்பாய் மாகாணத்துக்குள்பட்ட புணே மாவட்டம் பாராமதியில் 1910ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி நாதுராம் கோட்சே பிறந்தார். 
  அவரது பிறந்ததினத்தை தெளலத்கஞ்ச் பகுதியில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டதாக இந்து மகா சபையின் தேசிய துணைத்தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்தார். 
  மேலும் அவர் கூறியதாவது, தேசபக்தி மிக்கவரான கோட்சேவின் உருவ புகைப்படத்துக்கு ஆரத்தி எடுத்தும், அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினோம். 
  முன்பு பாஜக தலைவர்கள் பலர் கோட்சேவின் தேச பக்தியை பலமுறை புகழ்ந்து பேசியுள்ளனர். ஆனால், தற்போது ஆளுங்கட்சியாக பாஜக  உள்ளதால், அக்கட்சியை சேர்ந்த சிலர் கோட்சேவை இழிவுபடுத்தி பேசுகின்றனர் என்றார். 
  முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று இந்து மகாசபை சார்பில் கோட்சேவின் மார்பளவு சிலை குவாலியரில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், அந்த சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டது. 
  அகற்றிய சிலையை மாவட்ட நிர்வாகம் திருப்பி அளிக்காத நிலையில், குவாலியர் அலுவலகத்தில் மீண்டும் கோட்சேவின் சிலை அமைக்கப்பட்டதாக பரத்வாஜ் மேலும் தெரித்தார். 
  இதுதொடர்பாக கூடுதல் எஸ்.பி. சத்யேந்திர சிங் கூறுகையில்,கோட்சே பிறந்த தின விழாவை மகாசபையினர் அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளனர். இருப்பினும், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 
  கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாட முறையாக அனுமதி பெறப்பட்டதா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பூட்டிய கதவுக்குள், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பிறந்தநாள் கொண்டாட போலீஸாரின் அனுமதி தேவையில்லை என்றும் கூடுதல் எஸ்.பி.தெரிவித்தார். 
  தேசப்பிதா காந்தியை சுட்டுக்கொன்றதற்காக, கோட்சே அம்பாலா சிறைச்சாலையில் 1949ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். 
  அண்மையில், "நாட்டின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே' என்று  நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்து கடும் விவாதப்பொருளாக ஆனது. 
  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் கூறுகையில், கோட்சே தேச பக்தி மிக்கவர் என்று கூறியது அக்கட்சியினர் மத்தியிலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai