சுடச்சுட

  

  கூடுதல் மதிப்பெண் வழங்க லஞ்சம்: அரசு கல்லூரி முதல்வர், ஆசிரியர் கைது

  By DIN  |   Published on : 20th May 2019 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தான் மாநிலத்தில் செய்முறைத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கவும், வருகைப் பதிவை கூடுதலாகக் காட்டவும் மாணவியிடம் லஞ்சம் பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். அந்த மாநில லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மாணவரிடம் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக (பொறுப்பு) இருப்பவர் வர்த்தமானன். 
  இதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சஞ்சய் ஜெயின். இவர்கள் இருவரும் அக்கல்லூரியில் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அதிக மதிப்பெண் அளிப்பது மற்றும் வருகைப் பதிவை அதிகரித்து காட்டுவது உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
  அந்த கல்லூரியில் பி.எட் படித்து வந்த மாணவி ஹர்ஷினி ராத்தோரிடம் இதற்காக அவர்கள் இருவரும் ரூ.30,000 வரை பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் லஞ்சம் கேட்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஹர்ஷினி புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் கையும், களவுமாகப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். போலீஸாரின் ஆலோசனைப்படி முதல்கட்டமாக ரூ.10,000 அளிக்க ஹர்ஷினி ஒப்புக் கொண்டார். அதன்படி, சனிக்கிழமையன்று கல்லூரி அலுவலகத்தில் வைத்து முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் லஞ்சப் பணத்தை ஹர்ஷினி கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீஸார் அவர்கள் இருவரையும் ஆதாரத்துடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
  பின்னர், கல்லூரி முதல்வர் அறையில் நடத்திய சோதனையில், எந்தெந்த மாணவர்களிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என்பது குறித்த டைரி குறிப்பு கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, கோட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல்வர் வர்த்தமானன், ஆசிரியர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai