சுடச்சுட

  

  பொறுப்பற்ற செயல்களால் காங்கிரஸூக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் சித்து: அமரீந்தர் சிங் விமர்சனம்

  By DIN  |   Published on : 20th May 2019 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vote1

  மக்களவைக்கு இறுதிக் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் மனைவி பிரணீத் கெளர் உள்ளிட்ட  குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்த முதல்வர் அமரீந்தர் சிங்.

  பொறுப்பற்ற செயல்களால் காங்கிரஸூக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து என்று பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தமக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததற்கு அமரீந்தர் சிங்தான் காரணம் என்று சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் நவ்ஜோத் கௌருக்கு சித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோல், பஞ்சாபில் கடந்த 2015ஆம் ஆண்டில் சீக்கியர்களின் புனித புத்தகம் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சிரோமணி அகாலிதளம் தலைவர்கள் பிரகாஷ் சிங்  பாதல், சுக்பீர் சிங் பாதல் ஆகியோருக்கு எதிராக பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து கேள்வியெழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் பதவி விலக நேரிடும் என்றும் சித்து மிரட்டல் விடுத்தார்.
  மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், சித்து இவ்வாறு கருத்து வெளியிட்டது பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சண்டீகரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அமரீந்தர் சிங்கிடம் சித்துவின் மிரட்டல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அமரீந்தர் சிங் அளித்த பதில் வருமாறு:
  சித்து உண்மையான காங்கிரஸ்காரர் என்றால், தனது குறைகளை, பஞ்சாபில் தேர்தல் நேரத்தில் ஊடகங்களிடம் வெளியிடாமல், வேறோரு நல்ல நேரத்தில் தெரிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளால் காங்கிரஸூக்கு சித்து பாதிப்பை ஏற்படுத்துகிறார். இது சித்துவுக்கான தேர்தல் கிடையாது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி சந்திக்கும் தேர்தலாகும்.
  சித்து மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். அதேநேரத்தில், ஒழுங்கீன செயல் எதையும் காங்கிரஸ் சகித்து கொள்ளாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். தனிப்பட்ட முறையில், சித்துவுடன் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. சித்துவை குழந்தை பருவத்தில் இருந்தே எனக்குத் தெரியும். சித்துவுக்கு ஏதேனும் லட்சியம் இருக்கலாம்; பஞ்சாப் முதல்வராக அவருக்கு விருப்பம் இருக்கலாம் என்றார் அமரீந்தர் சிங்.
  "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தமது கேப்டன்; கேப்டனுக்கு எல்லாம் கேப்டன் ராகுல்' என்று சித்து கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். பஞ்சாப் முதல்வராக இருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங்கை மறைமுகமாக தாக்கும் வகையில், இக்கருத்தை அவர் வெளியிட்டதாக கருதப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் நடைபெற்ற கர்தார்பூர் வழித்தட திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டித் தழுவினார். இந்த சம்பவத்துக்கு அமரீந்தர் தனது அதிருப்தியை வெளியிட்டார். இந்த 2 சம்பவங்களால், அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு நிலவியது. இருப்பினும், சித்துவை அமரீந்தர் வெளிப்படையாக விமர்சித்ததில்லை. தற்போதுதான் முதல்முறையாக சித்துவை அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது அவர்கள் 2 பேரிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதையே வெளிப்படுத்துகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai