சுடச்சுட

  

  வாராணசி மக்களின் ஆசியைப் பெற்றவர் மோடி:  முரளி மனோகர் ஜோஷி

  By DIN  |   Published on : 20th May 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MURALI-JoshiC

  வாராணசி தொகுதி மக்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
  மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாராணசி தொகுதியில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி வாக்களித்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்த அவரிடம், "மோடிக்கு உங்களுடைய ஆசிர்வாதம் இருக்கிறதா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மோடியை ஆசிர்வதிப்பதற்கு நான் யார்? வாராணசி மக்கள் அவரை ஆசிர்வதிக்கிறார்கள். அதுதான் முக்கியம்' என்று ஜோஷி பதிலளித்தார்.
  பாஜக தேசியத் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாஜக கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.
  கடந்த 2009-ஆம் ஆண்டில் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஷி, கடந்த 2014-இல் அந்தத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு ஏதுவாக, கான்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
  2019-இல், அவரை கட்சித் தலைமை மீண்டும் களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அப்போது, இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக, பாஜக அமைப்புச் செயலர் ராம் லால் தன்னிடம் தெரிவித்ததாக, ஜோஷி இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தார்.
  2014-இல் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகப் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, இவரது தலைமையிலான குழு பல்வேறு அறிக்கைகளை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai