செயற்கையான மோடி அலையை உருவாக்க உதவும் கருத்துக் கணிப்புகள்: குமாரசாமி சாடல் 

இல்லாத செயற்கையான மோடி அலையை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் உதவும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
செயற்கையான மோடி அலையை உருவாக்க உதவும் கருத்துக் கணிப்புகள்: குமாரசாமி சாடல் 

பெங்களூரு: இல்லாத செயற்கையான மோடி அலையை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் உதவும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான ஏழாவது கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று நிறைவடைந்த நிலையில், ஞாயிறு மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இல்லாத செயற்கையான மோடி அலையை உருவாக்கவே இந்த கருத்துக் கணிப்புகள் உதவும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்களில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

எளிதில் மோசடி செய்வதற்கு வாய்ப்புள்ள இந்த எந்திரங்களுக்குப் பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவதற்காக, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைக் கூட தட்டியுள்ளன.

உலக அளவில் முன்னேறிய நாடுகள் கூட வழமையான வாக்குச் சீட்டு முறையைத்தான் பயன்படுத்துகின்றன.

ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளானது, ஆளுங்கட்சியானது வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை வலுப்படுவதாக அமைந்துள்ளது.

இத்தகைய கருத்துக் கணிப்புகள் நாட்டில் இன்னும் மோடி அலை நிலவி வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றன.

வாக்கு எண்ணிக்கையின் போது பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் குறைவாக கிடைக்கும் பட்சத்தில், எதிர்கட்சிகளை தங்கள் வசம் இழுக்க பாஜக இந்த செயற்கையாக உருவாக்கப்படும் மோடி அலையினை பயன்படுத்தும்.

இத்தகைய கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஆதரவான போக்கு நிலவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே உதவும்.

பொதுவாக கூறுவதைப்போல இது 'எக்ஸிட் போல்' மட்டுமே; 'எக்ஸாக்ட் போல்' அல்ல..!       

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com