இறுதிக்கட்ட தேர்தல்: உ.பி., ஹிமாசலில் 5 அதிகாரிகள் பலி

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் பணியின்போது, உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 அரசு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் பணியின்போது, உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 அரசு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மக்களவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, உத்தரப் பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கோரக்பூர், பான்ஸ்கோன் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 அதிகாரிகள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர்.
இதேபோல், ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 3 அரசு ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். அவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு சதவீத விவரம்: இறுதிக்கட்ட தேர்தலில், 59 தொகுதிகளிலும் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தில் 56.84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாராணசி தொகுதியில் 58.05 சதவீதமும், கோரக்பூரில் 57.38 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத்தில் 73.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பஞ்சாபில் 59 சதவீதமும், சண்டீகரில் 64 சதவீதமும், ஹிமாசலப் பிரதேசத்தில் 68 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் 71.15 சதவீதமும், பிகாரில் 53.55 சதவீதமும், ஜார்க்கண்டில் 70.54 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் வாக்குச்சாவடியான, ஹிமாசல பிரதேசத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 132 சதவீத வாக்குகள் பதிவாகின. 
இறுதிக்கட்ட தேர்தலில் 10.01 கோடி பேர், வாக்களிக்கும் தகுதியை பெற்றிருந்தனர். தேர்தலையொட்டி 1.12 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த 6 கட்டத் தேர்தல்களிலும் சராசரியாக 66.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கையும் 38 நாள்களில் நடைபெற்று முடிந்து விட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com