மோடியின் கேதார்நாத் பயணம்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார்

பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக புகார் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக புகார் தெரிவித்துள்ளன. இப்பயண நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதும், செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதும் தேர்தல் நெறிமுறை மீறல் என்று எதிர்க்
கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற மோடி, அங்குள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், கேதார்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் பேசினார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கேதார்நாத் கோயிலை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் மத்தியிலும் அவர் பேசியுள்ளார். இது, அப்பட்டமான தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் ஆகும். 
மக்களவை இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்துவிட்ட நிலையில், பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பான செய்திகள், தேசிய மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது உள்நோக்கம் கொண்டதுடன், வாக்காளர்கள் மத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது  என்று அந்த கடிதத்தில் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் புகார்: காங்கிரஸ் எம்.பி. பிரதீப் பட்டாச்சார்யா தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், "பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது. அவரது ஒவ்வொரு செயலும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகியுள்ளது. இது முறையற்றது' என்று கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கடிதம்: ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், "கேதார்நாத், பத்ரிநாத் பயணத்தின்போது, பிரதமர் மோடியின் தனிப்பட்ட செயல்கள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது தேர்தல் நெறிமுறை மீறலாகும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன்? பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் என தனியான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொண்டுள்ளதா' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com