சுடச்சுட

  
  indian-navy

  பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய சாதனை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய படைப்பிரிவு தளபதி ரண்பீர் சிங், இதுகுறித்து மேலும் கூறியதாவது:
  பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நடத்திய தாக்குதல் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும். நமது எதிரி நாட்டின் பகுதிக்குள் ஊடுருவி சென்று, அங்குள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய சாதனையாகும்.
  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை முயன்றது. ஆனால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்றார். அப்போது அவரிடம், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் எதுவும் நடத்தியுள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
  இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் அலுவலகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் துல்லியத் தாக்குதல் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  ஆதலால் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து எனது அபிப்ராயத்தை தெரிவிக்க விரும்பவில்லை. அதற்கான பதிலை மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
  ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியையும், போதைப் பொருள் கடத்தலை ஊக்குவிக்கும் செயலிலும் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
  ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 86 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து 26 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில பயங்கரவாதிகள், அவர்களது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் உதவியுடன், வன்முறையை பாதையைக் கைவிட்டு, பொது வாழ்க்கைக்குத் திரும்பி வந்துள்ளனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai