சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 லட்சம் போலீஸார், 3 லட்சம் துணை ராணுவத்தினர்

  By DIN  |   Published on : 21st May 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  security

  பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள ஏ.என்.கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைப் பார்வையிடும் எல்லை ஆயுதப் படை வீரர்.

  நாடு முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் 3 லட்சம் துணை ராணுவத்தினரும், 20 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
  இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலேயே, அதிகளவிலான போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது இந்த மக்களவைத் தேர்தலில்தான். நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் துணை ராணுவத்தினரும், 20 லட்சம் மாநில போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன், மாநில ஆயுதப்படை போலீஸார், ரிசர்வ் போலீஸார், ஊர்காவல் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 
  ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவடைந்ததும், தேர்தல் நடைபெற உள்ள அடுத்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களது, பணியின் காரணமாக மக்கள் அச்சமின்றியும், நம்பிக்கையுடனும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 
  சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையாளுவதிலும், வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பது, வாக்குப்பதிவு முடிந்த மின்னணு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்வது போன்ற பணியிலும் அவர்கள் திறமையாக ஈடுபட்டனர் என்று தெரிவித்தனர். 
  இதுதவிர, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ் எஃப், ஐடிபீபி, எஸ்எஸ்பி மற்றும் அஸ்ஸாம் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்புப்படை வீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
  மேலும், ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அவசரத் தேவைகளுக்கு விமான சேவைகளையும் வழங்கியது. அதற்கான ஆணைகளை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியும் வழங்கினர். மாநிலங்களுக்கு இடையே துணை ராணுவத்தினர் சென்று சேரவும், தேவையான ஆதரவை உள்துறை அமைச்சகம் மூலம் செய்து தரப்பட்டது. 
  நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai