சுடச்சுட

  

  வாக்குக் கணிப்புகளில் இருந்து தேர்தல் முடிவுகள் மாறுபட்டிருக்கும்!: காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை

  By புதுதில்லி  |   Published on : 21st May 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress-31

  தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் இருந்து, மே 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மாறுபட்டிருக்கும் என்றும், அதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

  மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவுகளும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அன்று மாலை வெளியான பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புக் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவையில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலமான 272-ஐயும் தாண்டி, 300-க்கும் மேலான இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையகம் வெறிச்சோடிக் காணப்படும்போதிலும், வாக்குக் கணிப்பு முடிவுகளை அக்கட்சியினர் நிராகரிக்கின்றனர். மே 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில்  வெற்றி பெறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

  இது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதாவது: ஜகதீஷ் சர்மா: வாக்குக் கணிப்பு முடிவுகள் வதந்தியைப் பரப்புவதற்காக  பாஜகவால் மேற்கொள்ளப்பட்ட  முயற்சியாகும். அவர்கள் இதுபோன்ற ஒரு சூழலை உருவாக்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முயற்சிக்கலாம். நாங்கள் நல்ல முறையில் செயலாற்றி, வெற்றி பெறுவோம்.  தற்போது வெளியான வாக்குக் கணிப்பு முடிவுகள் போல,  ஒரு தரப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவு  இருக்காது. அடிமட்ட அளவில் உண்மையான சூழலை நாங்கள் பார்த்துள்ளோம். பாஜகவைத் தவிர யாரும் வாக்குக் கணிப்பு முடிவுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.

  காங்கிரஸின் விச்சார் விபாக் அமைப்பின் பொதுச் செயலர் நீட்டா மிஸ்ரா: இந்த கருத்துக் கணிப்புகளானது, நிச்சயமற்ற தன்மையை உருவாக்கவும், மகா கூட்டணியை தங்களுடன் சேர வைக்கவும் பாஜக மேற்கொள்ளும் உத்தியாக இருக்கலாம். இந்த வாக்குக் கணிப்பு முடிவுகளால் நாங்கள் அதிருப்தி அடையவில்லை.  பாஜகவுக்கு வாக்களித்திருப்பதாக மக்கள் பயத்தின் காரணமாக பொய் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் நிச்சயமாக மற்றவர்களுக்குத்தான் வாக்கு அளித்திருப்பார்கள். மாதிரி தொழில்நுட்பங்கள் தெளிவாக இல்லை. பல முறை வாக்குக் கணிப்பு முடிவுகள் தவறாகிப் போயுள்ளன. அவை ஒருதலைப்பட்சமானவை.  இந்த முடிவுகளை யாரும் நம்பவில்லை. எங்களுக்கும் இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீது சந்தேகம் உள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம், பல்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சுரேஷ் சிங்: உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகளில் அதிக வித்தியாசம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கணிப்புகள் 22 இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன. சில கணிப்புகள் 52 இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன. வாக்குக் கணிப்பு முடிகளின் நம்பகத் தன்மை பொய்யாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் ஏபிபி-நீல்ஸன் போன்ற சில வாக்குக் கணிப்பு முடிவுகளில் பாஜகவுக்கு 22 கிடைக்கலாம் என்றும்,  நியூஸ் 18 -ஐபிஎஸ்ஓஎஸ் மற்றும் நியூஸ் 24-சாணக்யா 60 இடங்கள் கிடைக்கும் எனவும் வேறுபட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  காங்கிரஸ் தொண்டர் ரிஷி வல்லப்: இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள், ஊடகங்கள் பணம் வாங்கிக் கொண்டு செய்த வேலையாகும். பாஜகவை முன்னிலைப்படுத்தியே இந்த முடிவுகள் உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் மே 23-ஆம் தேதி வேறுவிதமாக இருக்கும்.  நியூஸ் 18 -ஐபிஎஸ்ஓஎஸ், இந்தியா டுடே -ஆக்ஸிஸ் மற்றும் நியூஸ் 24- சாணக்யா ஆகியவற்றின் கணிப்பு முடிவுகள் முறையே 336, 368, 336-364 இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏபிபி நியூஸ்-நீல்ஸன் முடிவானது தேசிய ஜனநாகக் கூட்டணிக்கு 267 இடங்கள் கிடைக்கும் என்றும்,  நியூஸ் எக்ஸ் கணிப்பு முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 242 இடங்கள் கிடைக்கும் எனவும் கணித்துள்ளது. 

  மக்களவையின் 542 இடங்களுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவை மட்டும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.  7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை மே 23-ஆம் தேதி  எண்ணப்படவுள்ளன.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai