சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் வீண் வதந்திகள் என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
  மக்களவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததும், பல்வேறு ஊடகங்கள் வாக்குக் கணிப்புகளை வெளியிட்டன. அவற்றில், பெரும்பாலான கணிப்புகள், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தன. மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 24, பாஜக 16, காங்கிரஸ் 2 இடங்களைக் கைப்பற்றும் என்று சில ஊடகங்கள் தெரிவித்தன.
  ஆனால், இந்த வாக்குக் கணிப்புகளை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தந்திர வேலை இது என்றும் அவர் கூறினார்.
  இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது: பல நேரங்களில் வாக்குக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளுடன் பொருந்தாமல் போய்விட்டன. மாவட்டங்களில் இருந்தும், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் திரிணமூல் நிர்வாகிகள் எங்களுக்கு அறிக்கை அளித்திருக்கிறார்கள். அதில், இந்த முறையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  எங்கள் கணிப்புப்படி, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது சிரமம். எதிர்க்கட்சிகளே மத்தியில் ஆட்சியமைக்கும். அதற்காக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார் அவர்.
  ஆர்ஜேடி கருத்து: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவிப்பது, கள நிலவரத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி தெரிவித்துள்ளது.
  பினராயி விஜயன் கருத்து: மக்களவைத் தேர்தல் தொடர்பான வெளியான வாக்குக் கணிப்புகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்தார். யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களை நம்ப வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai